தமிழகத்திற்கான கல்வி நிதியை நிறுத்திய மத்திய அரசு - ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல்
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 573 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
சமக்ர சிக்ஷா அபியான்
சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின்கீழ் மழலைக் கல்வி முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கல்வி வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டு தோறும் மாநிலங்களுக்கு சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின்கீழ் குறிப்பிட்ட அளவிலான நிதியை மத்தியக் கல்வி அமைச்சகம் வழங்கி வருகிறது.
இந்த திட்டத்திற்கான நிதி பங்கீடு மத்திய அரசு தரப்பில் இருந்து 60 சதவீதமும் மாநில அரசு 40 சதவீதமும் என உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 கல்வியாண்டில் தமிழ்நாட்டிற்கு 3,586 கோடியை தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டும். இந்த நிதியை 4 தவணையாக மத்திய அரசு வழங்கும்.
573 கோடி நிறுத்திவைப்பு
இதன்படி முதல் தவணையாக ரூ.573 கோடியை ஜூன் மாதமே மத்திய அரசு வழங்கியிருக்க வேண்டும். ஆனால் மாநில அரசு சார்பில் பல முறை கடிதம் எழுதியும் இந்த நிதி தற்போது வரை வழங்கப்படவில்லை. இந்த நிதி வழங்கப்பட்டதால் வட்டார வள மைய பயிற்றுநர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் உள்ளிட்ட 15 ஆயிரம் பேருக்கு ஊதியம் தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத மாணவர்களுக்கான கட்டணம், போக்குவரத்துக் கட்டணம், ஆசிரியர் பயிற்சி, மாணவிகளுக்குத் தற்காப்புப் பயிற்சி ஆகியவையும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக மாநில அரசின் நிதிப் பங்களிப்பின் கீழ் சமக்ர சிக்ஷா அபியான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதால் மாநில அரசுக்கு நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது.
பி.எம். ஸ்ரீ பள்ளி
ஜூலை மாதம் டெல்லியில் நடைபெற்ற மறுஆய்வுக் கூட்டங்களின் போது, நிதியை வெளியிட பி.எம். ஸ்ரீ பள்ளிகளை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று மத்திய அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
பி.எம். ஸ்ரீ பள்ளிகளில் தேசிய கல்விக் கொள்கையின் வழிகாட்டுதல்களை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என்ற விதியை தவிர்த்து, ஒப்புதல் பெறுவதற்காக மத்திய கல்வி அமைச்சகத்திற்கு தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அனுப்பியது. ஆனால் இதை மத்திய அரசு ஏற்க மறுத்துள்ளது.
இந்த புதிய கல்வி கொள்கையில் உள்ள மும்மொழி கொள்கை, ஆறாம் வகுப்பிலிருந்து தொழிற்கல்வியை அறிமுகப்படுத்துதல் போன்ற சில குறிப்பிட்ட விதிகளை மாநில அரசு ஏற்க மறுக்கிறது.