தேர்தலுக்கு பின் விஜய்யிடம் ஆதரவு கேட்போம் - மத்திய அமைச்சர் பேச்சு
2026 தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் திகதி நடைபெற உள்ளது.
தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என நான்குமுனை போட்டி நிலவி வருகிறது.
விஜய்யிடம் ஆதரவு கேட்போம்
இந்நிலையில், புதுச்சேரி வந்துள்ள இந்திய குடியரசு கட்சியின் தலைவரும், மத்திய இணை அமைச்சருமான ராமதாஸ் அத்வாலே செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

இதில் பேசிய அவர், "அசாமில் 4 தொகுதிகளிலும், தமிழ்நாட்டில் 3 தொகுதிகளிலும் போட்டியிடுவது குறித்து பரிசீலனை செய்து வருகிறோம். மற்ற தொகுதிகளில் பாஜக - தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு வழங்குவோம்.
அசாம் மற்றும் புதுச்சேரியில் ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வராது. அங்கு விஜய்யும் தேர்தலில் போட்டியிடுகிறார்.
இந்த தேர்தலில் எங்களுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் தேர்தலுக்கு பின்னர் விஜய்யிடம் ஆதரவு கேட்போம். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 5 மாநிலங்களிலும் நிச்சயமாக ஆட்சி அமைக்கும்" என பேசியுள்ளார்.

விஜய் அதிமுக கூட்டணியில் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், நம்முடைய மதச்சார்பற்ற கொள்கையில் எந்த சமரசமும் இல்லை. நம்முடைய தலைமையில் ஆட்சி அமையும் அவதூறுகளை நம்ப வேண்டாம் என இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் விஜய் பேசியது குறிப்பிடத்தக்கது.