எங்களுக்கு தெரியாமல் ஆக்சிஜனை ஆந்திராவுக்கு அனுப்ப மத்திய அரசு உத்தரவு: விஜயபாஸ்கர் அதிருப்தி

Tamil Nadu Andhra Pradesh Oxygen Vijayabaskar
By mohanelango Apr 21, 2021 05:06 AM GMT
Report

இந்தியா முழுவதும் கொரோனா 2வது அதி தீவிரமாக பரவி வரும் நிலையில், பல மாநிலங்களில் போதுமான படுக்கை மற்றும் ஆக்சிஜன் இன்றி தடுமாறி வருகின்றன.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தேவையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் பல்வேறு இடங்களில் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

தொழில்சாலை தேவைகளுக்கு பயன்படும் ஆக்சிஜனை மருத்துவ தேவைகளுக்கு திசைமாற்ற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த நிலையில் சென்னை ஸ்ரீபெரும்புத்தூரில் உற்பத்தி செய்யப்படும் 45,000 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவால் தமிழகத்தில் தங்கு தடையின்றி ஆக்சிஜன் விநியோகிக்கும் திட்டத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இரு மாநிலங்களை விட தமிழ்நாட்டில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இது தொடர்பாக பேட்டி அளித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ”ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்பும் முடிவு தொடர்பாக மத்திய அரசு மாநில அரசுடன் கலந்து ஆலோசிக்கவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

பிற மாநிலங்களுக்கு உதவ தமிழகம் தயாராக இருப்பதாக கூறியுள்ள அவர், அதே வேளையில் தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் ஆக்சிஜன் சப்ளை விவகாரம் பற்றி மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் முறையிடப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.