வலுக்கட்டாயமாக இந்தியை திணிக்கும் மத்திய அரசு -பாயிண்ட்டை பிடித்த எடப்பாடி!
இந்தி பேசாத மாநிலங்களில் வலுக்கட்டாயமாக இந்தியை மத்திய அரசு திணிப்பதாக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
சென்னை தொலைக்காட்சி நிலையமான ‘டிடி தமிழ்’ சார்பில் இந்தி மாத கொண்டாட்டங்களையொட்டி கடந்த ஓராண்டாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக வெளியாகியுள்ள அழைப்பிதழில், “சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தின் இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்களில் பங்கேற்க அனைவரையும் மனமார வரவேற்கிறோம்.
இடம் : தொலைக்காட்சி நிலைய அரங்கம்-1, 5, சுவாமி சிவானந்தா சாலை, சேப்பாக்கம். சென்னை-600 005. நாள்: அக்டோபர் 18 (வெள்ளிக்கிழமை) மாலை 4 முதல் 5 மணி வரை. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு
இதற்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி தனது கண்டத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் " எங்கெங்கு காணினும் சக்தியடா ” என்று பாவேந்தர் பாரதிதாசன் பாடினார்.
தொட்டதெற்கெல்லாம் அவரை குறிப்பிடும் இன்றைய மத்திய ஆட்சியாளர்கள் நாட்டில் “எங்கெங்கு காணினும் இந்தி” -யடா என்று பாடிக்கொண்டிருப்பது கண்டனத்திற்குரியதாகும். நாடு முழுவதும் இந்தி மாதம் என்ற ஒன்றை மத்திய அரசு கொண்டாடி வருகிறது.
இந்த கொண்டாட்டங்களின் நிறைவு விழா சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் இன்று மாலை நடைபெறும் என்றும், அதில் தமிழக ஆளுநர் அவர்கள் கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தி பேசாத மாநிலங்களில் வலுக்கட்டாயமாக இந்தியை திணிக்கும் வகையில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை மத்திய அரசு முன்னெடுப்பது ஏற்கக்கூடியதல்ல என்று தெரிவித்துள்ளார்.