பாஜக அரசிடம் கொரோனாவை கையாள திட்டமே இல்லை - சோனியா காந்தி

India Corona BJP Congress
By mohanelango Apr 17, 2021 11:58 AM GMT
Report

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. புதிய பாதிப்புகளும் மரணங்களும் நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகின்றன. 

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி இன்று கூடி தற்போது உள்ள சூழல் குறித்து விவாதித்தது. அப்போது காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மோடி அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

அதில், “நம்மிடம் ஒரு வருடம் இருந்தும் மத்திய அரசு எதற்குமே தயாராகவில்லை. கொரோனா பரவலின் இரண்டாம் அலையால் நாடு பல்வேறு துன்பங்களைச் சந்தித்து வருகிறது.

நாடு முழுவதும் கொரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவர் மருந்து, மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், கொரோனா தடுப்பு மருந்து, ஆக்சிஜன், வெண்டிலேட்டர் ஆகியவைகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது.

காங்கிரஸ் முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களிடம் பேசுகையில் மத்திய அரசு மாநில அரசுகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவே இல்லை என்பது தெரிகிறது.

ஆனால் மத்திய அரசு கள்ள மௌனம் காத்து வருகிறது. எதிர்க்கட்சிகளின் பயனுள்ள பரிந்துரைகளை கவனத்தில் கொள்ளாமல் தேவையற்ற பழிசுமத்தும் வேலைகளைச் செய்து வருகிறது.

உள்நாட்டு மக்கள் ஆயிரக்கணக்கில் இறந்து கொண்டிருக்கும்போது ஆறு கோடி தடுப்பூசிகளை மத்திய அரசு ஏற்றுமதி செய்துள்ளது.

தடுப்பூசிகளின் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும். தடுப்பூசிகளுக்கான வயது கட்டுப்பாடுகளை குறைக்க வேண்டும். கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தும் பொருட்கள் மீது விதிக்கப்படும் ஜி.எஸ்.டி வரியை முற்றிலுமாக விலக்க வேண்டும்.

மேலும் ஏழை குடும்பங்களுக்கு மாதம் தோறும் ரூ.6,000 நிதியுதவி வழங்க வேண்டும். மேலும் புலம்பெயர் தொழிலாளர்கள் மீண்டும் சொந்த ஊர்களுக்கு திரும்புகிறார்கள். அவர்களுக்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும்” என்றார்.