இனி பள்ளிகளில் ‘ஆல் பாஸ்’ முறை ரத்து? அதிர்ச்சி அளிக்கும் மத்திய அரசு
5 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கட்டாய தேர்ச்சி
மாணவர்களின் கல்வி இடைநிற்றலை தவிர்க்கும் வகையில் மத்திய அரசு கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்தி இருந்தது.
இதன்படி 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் அனைவரையும் கட்டாயம் தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என்ற நடைமுறை அமல்படுத்தப்பட்டது.
5 மற்றும் 8 ஆம் வகுப்பு
இந்நிலையில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி கொள்கையை ரத்து செய்வதாக மத்திய கல்வித்துறைச் செயலாளர் சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.
இதன்படி 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் இறுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்த வகுப்பிற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு 2 மாதங்களில் மற்றொரு முறை தேர்வு எழுதும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். மறுதேர்வில், மீண்டும் தோல்வி அடைந்தால், அடுத்த வகுப்புக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். மீண்டும் அதே வகுப்பில் பயில வேண்டும்.
அதே நேரம் தேர்ச்சி பெறாதவர்களை பள்ளியை விட்டு வெளியேற்ற கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அனைத்து மாநிலங்களிலும் மத்திய அரசு நடத்தும் கேந்திரா வித்யாலயா, நவொதயா வித்யாலயா, சைனிக் பள்ளிகளுக்கு பொருந்தும் என்றும், இதை அமல்படுத்துவது குறித்து அந்த மாநில அரசுகள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.