சென்னையில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் - மத்திய அரசு அதிரடி கடிதம்

chennai central government covid restrictions
By Petchi Avudaiappan Dec 30, 2021 11:33 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

சென்னையில் கொரோனா பாதிப்பு கடந்த 2 வாரங்களாக அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார். 

தமிழகத்தில் கடந்த மே மாதம் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டது. அப்போது அமல்படுத்தப்பட்ட ஊரடங்கிற்குப் பின்னர் தொற்று பாதிப்பு குறைந்து வந்ததால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர். ஆனால் தற்போது கொரோனாவின் உருமாற்றமான ஒமிக்ரான் இந்தியா முழுவதும் பரவ தொடங்கியுள்ளது. 

இதனால் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தவும் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

இதனிடையே சென்னையில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதில் கடந்த டிசம்பர் முதல் வாரம் தலைநகர் சென்னையில் 1088 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இது டிச. 2ஆம் வாரம் 987ஆக குறைந்திருந்தது. இருப்பினும், 3ஆம் வாரம் இது 1039ஆக உயரத் தொடங்கியது. குறிப்பாக இந்த கடைசி வாரம் 1720 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்துமாறு மத்திய சுகாதார துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு கடிதம் எழுதியுள்ளார். நோய் பரவலைத் தடுக்கவும் கொரோனா பாதிப்பை கண்டறிவதில் ஏற்படும் தாமதத்தைக் குறைக்கவும் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு ராஜேஷ் பூஷண் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் சென்னையில் வைரஸ் பரவலைக் குறைக்கக் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றும் RT-PCR, RAT உள்ளிட்ட கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என்றும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் ஏற்கனவே புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் நாட்களில் தலைநகர் சென்னைக்கு மட்டும் கூடுதலாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.