கர்ப்பிணிப் பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் : இனி கொரோனா தடுப்பூசி போடலாம்
கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் கர்ப்பிணி பெண்களுக்கு இதுவரை தடுப்பூசி செலுத்துவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு எதிராக கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய சுகாதாரத்துறை இன்று அனுமதியளித்துள்ளது. நோய்த்தடுப்பு தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.
அதன்படி கோ-வின் செயலில் பதிவு செய்தோ அல்லது அருகில் உள்ள தடுப்பூசி மையங்களுக்கு நேரில் சென்றோ கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்
கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.