கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் மத்திய அரசின் இரட்டை நிலைப்பாடு! வலுக்கும் எதிர்ப்பு

Corona Vaccine Modi Congress Supreme Court
By mohanelango May 10, 2021 12:09 PM GMT
Report

கொரோனா வைரஸிலிருந்து மீள தடுப்பூசி செலுத்துவது ஒன்றே நம் அனைவரின் முன் உள்ள தீர்வாக உள்ளது. கிட்டத்தட்ட ஒரு வருட கால ஆய்வுகளுக்குப் பிறகு பல வகையான தடுப்பூசிகள் உலகின் பல்வேறு நாடுகளில் செலுத்தப்பட்டு வருகின்றன. 

கொரோனாவுக்கான தடுப்பூசி பரிசோதனை மையங்களில் ஆய்வில் இருந்தபோதே இதனை அனைத்து நாடுகளுக்கும் சரி சமமாக பிரித்து வழங்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்கிற குரல்கள் எழுந்தன. 

கொரோனா தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டால் பணக்கார நாடுகளுக்கும் ஏழை நாடுகளுக்கும் இடையே மிகப்பெரிய ஏற்றத்தாழ்வுகள் உருவாகும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது.  அந்த ஆரூடங்கள் அனைத்தும் தற்போது உண்மையாகிவிட்டன. கொரோனாவுக்கான தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்ட உடனே மேற்குலக நாடுகள் தங்கள் தேவைக்கும் அதிகமாக கொரோனா தடுப்பூசிகளை வாங்கிக் குவித்தன.

அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் மின்னல் வேகத்தில் தங்களுடைய நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகிற நிலையில் உலகின் பல நாடுகள் தடுப்பூசியின் வாசமே அறியாமல் இருக்கின்றன. ஆப்பிரிக்கா மற்றும் வளர்கிற மூன்றாம் உலக நாடுகளுக்கு தடுப்பூசி கிடைப்பதற்கு இரண்டு வருடத்திற்கும் மேல் கூட ஆகலாம் எனத் தெரிகிறது. 

கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் மத்திய அரசின் இரட்டை நிலைப்பாடு! வலுக்கும் எதிர்ப்பு | Central Government Faulty Policy On Corona Vaccine

இந்நிலையில் இந்தியா, பிரேசில் உள்ளிட்ட வளர்கின்ற நாடுகள் கொரோனா தடுப்பூசிகள் தொடர்பான காப்புரிமைகளுக்கு தற்காலிகமாக தளர்வு அளிக்க வேண்டும் என உலக வர்த்தக நிறுவனத்தில் கோரிக்கை வைத்திருந்தன. 

கொரோனா தடுப்பூசி தயாரிப்புக்கான தொழில்நுட்பம், மூலப் பொருட்கள் ஆகியவைகளின் காப்புரிமைகள் பெரும்பாலும் மேற்குலக நாடுகளிடமே உள்ளன. இவை தளர்த்தப்பட்டால் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு அதிகரிக்கப்பட்டு விரைவுபடுத்தப்படும். இதன்மூலம் பொருளாதாரத்தில் பின் தங்கிய நாடுகளுக்கு விரைவில் தடுப்பூசிகள் கிடைப்பது சாத்தியமாகும்.

ஆனால் இந்த கோரிக்கைக்கு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மறுப்பு தெரிவித்துவிட்டன. சர்வதேச அரங்கில் இந்தியா இந்த கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மிக நீண்ட பேச்சுவார்த்தைகள், அரசியல் அழுத்தங்களுக்குப் பிறகு அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் தடுப்பூசிக்கான காப்புரிமைகளை தளர்த்த இசைவு தெரிவித்துள்ளன. இந்த முடிவிற்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் இந்தியாவிலும் கொரோனா தடுப்பூசிகளை அனைவருக்கும் பரவலாக வழங்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளன. மத்திய பாஜக அரசு இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு மட்டுமே தடுப்பூசி தயாரிப்பதற்கான அனுமதியை வழங்கியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. புனேவில் உள்ள சீரம் நிறுவனம் கோவிஷீல்டு தடுப்பூசியையும், ஹைதரபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் தடுப்பூசியையும் தயாரித்து வருகின்றன.

நீண்ட காலதாமத்திற்குப் பிறகு தான் வெளிநாடுகளின் தடுப்பூசிகளுக்கும் அனுமதி வழங்கும் முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. ஆனால் இந்தியாவுக்கான தடுப்பூசி தேவை என்பது உற்பத்தி அளவைவிட பல மடங்கு அதிகமாக உள்ளது. இதனால் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் மத்திய அரசின் இரட்டை நிலைப்பாடு! வலுக்கும் எதிர்ப்பு | Central Government Faulty Policy On Corona Vaccine

இந்தியாவில் Patent சட்டத்தில் உள்ள ’Compulsory Licensing’ என்னும் அதிகாரத்தைப் பயன்படுத்தி மத்திய அரசு தடுப்பூசி தயாரிப்பை அதிகரிக்க முடியும். இந்த அதிகாரத்தை மத்திய அரசு பயன்படுத்த வேண்டும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.ஆனால் மத்திய அரசு அந்தக் கோரிக்கைகள் மீது செவி சாய்க்கவில்லை.

கொரோனா சூழல், தடுப்பூசி தொடர்பான பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு வருகின்றன. ’இந்தியர்கள் அனைவருக்கும் பாரபட்சமின்றி கொரோனா தடுப்பூசி வழங்க வேண்டும்’ என உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. 

அந்த வழக்கிற்காக பிராமண பத்திரம் தாக்கல் செய்துள்ள மத்திய அரசு  ’Compulsory Licensing’ அதிகாரத்தை பயன்படுத்த வேண்டிய தேவையில்லை எனத் தெரிவித்துள்ளது. மேலும் இந்தப் அதிகாரத்தைப் பயன்படுத்துவது தேவையற்ற சிக்கல்களை உருவாக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

இதனை முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் எம்.பியுமான ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார். “உலக வர்த்தக நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி மீதான காப்புரிமைகளை ரத்து செய்ய வேண்டும் என்கிறது மோடி அரசு. அதே விவகாரத்தில் இந்தியாவில் வேறு மாதிரியான முடிவை எடுக்கிறது. இந்த முடிவு அபத்தமானது மற்றும் அதில் உண்மை இல்லை” என்று தெரிவித்துள்ளார்.