கொரோனா தடுப்பூசிக்கு வெவ்வேறு விலை சரிதான் - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

Corona Vaccine Supreme Court
By mohanelango May 10, 2021 06:38 AM GMT
Report

கொரோனா தடுப்பூசிகளை தனியார் நிறுவனங்களிடமிருந்து மத்திய அரசு மட்டுமின்றி, மாநில அரசுகளும் கொள்முதல் செய்ய சமீபத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுவரை மத்திய அரசு தான் கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு வழங்கி வந்தது.

இதன் பின்னர் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள் மாநில அரசுகளுக்கு விற்கும் தடுப்பூசியின் விலையை உயர்த்தின. ஆனால், மத்திய அரசுக்கு தொடர்ந்து குறைவான விலையிலே தடுப்பூசிகளை விற்பனை செய்கின்றன.

இந்த நிலையில்தான் கொரோனா கட்டுப்பாடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. தடுப்பூசிகளின் விலைகளில் இவ்வாறு வித்தியாசம் இருப்பதை சுட்டிக்காட்டி நீதிபதிகள் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினர்.

இதை தொடர்ந்து மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தடுப்பூசிகளுக்கு வெவ்வேறு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதை நியாயப்படுத்தி மத்திய அரசு வாதிட்டது.

பிரமாண பத்திரத்தில் மத்திய அரசு கூறுகையில், ”தடுப்பூசி விலை வேறுபாடு என்பது தனியார் நிறுவனங்களுக்கு ஊக்கம் தரும் நடவடிக்கை ஆகும். போட்டி சந்தை இதன் மூலம் உருவாகும். எனவே பல்வேறு தனியார் தடுப்பூசி நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு இந்திய சந்தைக்குள் வருவார்கள்.

ஒருவருக்கு ஒருவர் விலையை அவர்களாகவே குறைத்துக் கொள்வார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த போட்டி சந்தை காரணமாக அதிக விற்பனையாளர்கள் சந்தைக்கு வருவதால் அதிகப்படியான தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு கிடைக்கும். தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படாது.

18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதற்கு அனைத்து மாநிலங்களும் முன்வந்துள்ளன. எனவே பொதுமக்களுக்கு இந்த செலவு சென்று சேராது.

எனவே தடுப்பூசி நிறுவனங்கள் விலையை நிர்ணயித்துக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளோம். ஒரு உலகளாவிய தொற்றுநோய் சூழலில், மருத்துவ மற்றும் விஞ்ஞான நிபுணர்கள் கருத்தை கேட்டு மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனவே இதில் நீதித்துறை தலையீடு தேவையற்றது.

மத்திய அரசு ஒரு தடுப்பூசிக்கு 150 ரூபாய் செலுத்துகிற நிலையில், மாநில அரசுகள் இருந்து 300 அல்லது 400 ரூபாய் அதிகமாக செலுத்துகின்றன. இந்த விலை வித்தியாசம் என்பது 40 ஆயிரம் கோடி ரூபாய் வரை கூடுதல் செலவினத்தை ஏற்படுத்தக்கூடியது என்று முந்தைய விசாரணையின்போது உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

இந்த நிலையில்தான் மத்திய அரசு இந்த பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது. இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வருகிறது. இந்தியர்கள் அனைவருக்கும் முழுமையாக இலவசமாக தடுப்பூசி செலுத்த வேண்டும் என்கிற வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.