இடஒதுக்கீட்டில் குளறுபடி - மத்திய அரசு, அண்ணா பல்கலைக்கழகம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டு பி.டெக் படிப்புகளுக்கு இந்த ஆண்டு 10% பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டிருப்பது கடும் சர்ச்சைக்குள்ளானது. மத்திய அரசு கொண்டு வந்திருந்த 10% இடஒதுக்கீட்டை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.
எனவே மத்திய அரசு பணிகளுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் தான் இந்த இடஒதுக்கீடு பொருந்தும். இந்நிலையில் மாநில அரசின் கீழ் இயங்கும் அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்த இடஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
கடந்த ஆண்டைப் போல 49.5 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தாமல் பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியது ஏன்? என அண்ணா பல்கலைக்கழகமும் மத்திய அரசு மார்ச் 12ம் தேதி விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டை மாநில அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என தமிழக அரசு வழக்கறிஞர் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். மத்திய அரசு பணிகளுக்கும், கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கவும் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
மாநில அரசின் இடஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிரான நிலைபாட்டை அண்ணா பல்கலைக்கழகம் எடுக்க முடியாது என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.