ஆந்திராவில் பொதுமக்களிடம் செல்போன் திருட்டில் ஈடுபட்ட 7 பேர் கைது
ஆந்திராவில் பொதுமக்களிடம் இருந்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்த நிலையில் அவர்களிடம் இருந்த 405 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் போன்ற இடங்களில் செல்போன் திருட்டு நடப்பதாக வந்த புகாரை அடுத்து சிறப்புக் குழுவினர் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதனிடையே சித்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கடந்த 6 மாதங்களாக செல்போன் திருட்டு குறித்து விசாரணை நடத்தியதில் சித்தூர் பேருந்து நிலையத்தில் சுற்றித்திரிந்த 7 பேரை பிடித்து விசாரணை நடத்தியதாகவும், இதில் செல்போன் திருடியது அவர்கள் தான் என தெரிய வந்ததாகவும் கூறினார்.
மேலும் அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் திருடிய செல்போன்களை பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று விற்பனை செய்ததாக கூறியுள்ளனர்.
இதனையடுத்து கர்நாடகா, தெலுங்கானா, தமிழ்நாடு மாநிலங்களுக்குச் சென்று அவர்கள் விற்பனை செய்த ரூ.60 லட்சம் மதிப்பிலான 405 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டு வருவதாகவும் காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.