பாகிஸ்தானில் 3 நாட்களுக்கு செல்போன் சேவை ரத்து - அதிரடி அறிவிப்பு
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 3 நாட்களுக்கு செல்போன் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கும் 3 நாட்கள் மாநாடு நேற்று தொடங்கியது. நாளை வரை நடைபெறும் இந்த மாநாட்டை சவுதி அரேபியா தலைமை தாங்கி நடத்துகிறது.
இந்த மாநாட்டையொட்டி இஸ்லாமாபாத்தில் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளும், கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மாநாடு நடைபெறும் 3 நாட்களும் இஸ்லாமாபாத்தின் முக்கியமான பகுதிகளில் செல்போன் சேவையை ரத்து செய்யுமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் நாடாளுமன்றம் மற்றும் செனட் செயலகம் ஆகியவற்றை மூடியுள்ள பாகிஸ்தான் அரசு, அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு வருகிற 20 ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து உள்ளது. இதைப்போல பொது கணக்குக்குழு மற்றும் நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டங்களையும் 20 ஆம் தேதி வரை ரத்து செய்துள்ளது.