காரில் கடத்தப்பட்ட இளம்பெண் கதறல்.. பரவும் பகீர் சிசிடிவி காட்சி - கமிஷனர் விளக்கம்
இளம்பெண் ஒருவரை கட்டாயப்படுத்தி காரில் கடத்திச் சென்றதாக பரவி வரும் சிசிடிவி காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளம்பெண் கடத்தல்
கோவை, தீபம் நகர் பகுதியில் இளம்பெண் ஒருவர் நேற்று இரவில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த நபர் ஒருவர் அப்பெண்ணை தாக்கி காரில் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றதாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு சோதனை மேற்கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக, மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் கூறுகையில்,
இருகூர் அருகே வெள்ளை நிற காரில் பெண் ஒருவர் அலறல் சப்தத்துடன் சென்றதாக அங்கிருந்து ஒரு பெண்மணி காவல் துறையினருக்கு 100க்கு அழைத்து தகவல் அளித்துள்ளார். அங்குள்ள சிசிடிவி காட்சிகளை நாம் கைப்பற்றியுள்ளோம்.
கமிஷனர் விளக்கம்
சூலூர் பகுதியில் இருந்து ஏஜி புதூர் பகுதி வரை வந்துள்ளார்கள். அங்குள்ள உள்ள ஒரு பேக்கரியில் சிசிடிவி காட்சிகளை காப்பற்றி உள்ளோம். சூலூரில் இருந்து வந்த ஒரு வாகனம் இருகூர் வழியாக சென்றுள்ளது. அப்போது, ஒரு காரில் அலறல் சத்தம் கேட்டதாக மட்டுமே தகவல் கிடைத்துள்ளது.

பெண் காணவில்லை என்பதுபோல இதுவரை புகார் எதுவும் வரவில்லை. வாகனத்தின் பதிவு எண் எந்த ஒரு இடத்திலும் தெளிவாக புலப்படவில்லை என்பதால் மேற்கொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். வாகன எண் தெளிவாகத் தெரிந்ததும் அடுத்தகட்ட விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.