தள்ளுவண்டி கிடந்த சிறுவனின் சடலம்: சிசிடிவி காட்சியில் சிக்கிய இருவர் - நடந்தது என்ன?
விழுப்புரம் அருகே தள்ளுவண்டியில் சிறுவனின் சடலம் கிடந்த விவகாரத்தில் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் விழுப்புரம்- சென்னை நெடுஞ்சாலையில் மேல்தெரு பகுதியில் உள்ள ஒரு மருந்துக்கடை அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இஸ்திரி தள்ளுவண்டியில் 4 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் மர்மமான முறையில் சடலமாக கிடந்தான்.
இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து விழுப்புரம் மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவனின் உடலை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.பின்னர் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் உணவு இல்லாமல் பட்டினியால் அவன் இறந்தது தெரியவந்தது. சிறுவனின் அரசு அங்கன்வாடி குழந்தைகளுக்கான ஆடைகளை வைத்து சுற்றியுள்ள அங்கன்வாடி மையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அதன் மூலம் ஏதேனும் தகவல் கிடைக்குமா என போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி மூலம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதனிடையே போலீசாரிடம் கிடைத்த சிசிடிவி பதிவு ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் சிறுவனை ஒரு நபர் தோளில் சுமந்து வருவதும், அவருடன் மற்றொருவர் வருவதும் பதிவாகி உள்ளது. இதன்மூலம் அவர்கள் இருவரும் சிறுவனை தள்ளுவண்டியில் போட்டுச்சென்றது உறுதியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து இருநபர்களையும் அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.