சாத்தான்குளம் கொலை வழக்கு : தந்தை மகன் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் சிபிஐ தகவல்
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சார்பு ஆய்வாளர் ரகுகணேஷ் ஜாமின் கோரிய வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை ஒத்திவைத்தது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தனர்.
கடந்த 2020, ஜூன் 19-ல் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி கடையை திறந்து வைத்ததாக கூறி இருவரையும் போலீசார் சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
காவல் நிலையத்தில் வைத்து இருவரையும் போலீசார் கடுமையாக தாக்கியதில் முதலில் பென்னிக்ஸ், அடுத்து ஜெயராஜ் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் மற்றும் காவலர்கள் என 9 பேரை சிபிஐ கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தது.
இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சார்பு ஆய்வாளர் ரகுகணேஷ் ஜாமின் கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அதை எதிர்த்து வாதித்திட்ட சிபிஐ தரப்பு,
சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தை,மகனை போலீசார் கொடூரமாக தாக்கியுள்ளனர் என தெரிவித்துள்ளது.
மேலும், காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ள சக்தி மக்களை காப்பாற்றுவதற்காக மட்டுமே என்று வாதிட்ட சிபிஐ, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ்-க்கு பிணை வழங்கக்கூடாது, வழங்கினால் சாட்சியங்களை அழிக்க வாய்ப்புள்ளது என கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து,வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை ஒத்திவைத்துள்ளது.