மணிப்பூர் பாலியல் வன்கொடுமை; துணை போன போலீசார் - சிபிஐ அதிர்ச்சி தகவல்!
மணிப்பூரில் நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் போலீசாரும் துணை போனதாக சிபிஐ அதிர்ச்சித் தகவல் தெரிவித்துள்ளது.
மணிப்பூர் வன்கொடுமை
மணிப்பூர், `மைதேயி' சமூக மக்கள், தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென அரசை வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து `குக்கி' பழங்குடியின மக்கள் போராடி வருகின்றனர். இதனால் கலவரம் தீவிரமாகியது.
அப்போது, குக்கி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி இழுத்துச் சென்ற இளைஞர்கள் சிலர், கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.மேலும், பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினர் அந்தக் கும்பலால் கொலைசெய்யப்பட்டனர். இதுகுறித்த வீடியோ வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனை கண்டித்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டங்கள் வெடித்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட 5 பேர் மற்றும் ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டனர். பிறகு இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ நீதிமன்றத்தில் சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
போலீசார் துணை
அதில், மெய்டேய் சமூகத்தை சேர்ந்தவர்கள், குக்கி-ஸோமி சமூகத்தை சேர்ந்த குடும்பத்தை தாக்கியுள்ளனர். அவர்கள் வனப்பகுதிக்குள் ஓடி ஒளிந்தனர். பின்னர், வன்முறை கும்பல் அவர்களை கண்டறிந்து குடும்பத்தினரை ஆளுக்கு ஒரு திசையாக இழுத்துச் சென்றனர்.
அப்போது வன்கொடுமைக்கு ஆளான பெண்கள், அங்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் ஜீப்பில் ஓடிச் சென்று ஏறியுள்ளனர். மேலும் ஜீப்பை தொடங்கி தங்களை காப்பாற்றுமாறு போலீஸ் ஓட்டுநரிடம் அவர்கள் கதறியுள்ளனர். ஆனால் ஜீப் ஓட்டுநர், சாவி தன்னிடம் இல்லை என கூறியுள்ளார்.
பின்னர், ஜீப்பை ஓட்டிச் சென்று கலவர கும்பல் அருகே நிறுத்தியுள்ளார். இந்த கொடூரத்தில் மேலும் சில போலீஸாரும் உடனிருந்தனர். அதன் பிறகு அடுத்தடுத்து துயர சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன" என்று சிபிஐ குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.