காவிரி விவகாரம்; ஒரு கன்னடனாக சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் - நடிகர் பிரகாஷ் ராஜ்!
கன்னடனாகவும், கன்னடர்கள் சார்பாகவும் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்று பிரகாஷ் ராஜ் பதிவிட்டுள்ளார்.
காவிரி விவகாரம்
காவிரியிலிருந்து தமிழகத்திற்கு நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் மாண்டியா பந்த், பெங்களூர் பந்த் என போராட்டங்கள் நடத்தப்பட்டன. மேலும், கர்நாடகா பந்த் போராட்டம் இன்று நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள சித்தா திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று பெங்களூரில் நடைபெற்றது. அப்போது கன்னட அமைப்பினர் கும்பலாக உள்ளே நுழைந்து "இங்கிருந்து தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் போகிறது, அதனை எதிர்த்து நாங்கள் போராடுகிறோம்.
இங்கே வந்து தமிழ் படம் பற்றி பேசிக் கொண்டிருப்பதா? என எதிர்ப்பு தெரிவித்து தகராறில் ஈடுபட்டனர். இதனால் நடிகர் சித்தார்த் தமது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்தார்.
பிரகாஷ் ராஜ்
இந்நிலையில் இது தொடர்பாக திரைப்பட நடிகர் பிரகாஷ் ராஜ் வெளியீட்டுக்குள்ள ட்விட்டர் பதிவில் "பல ஆண்டுகளாக நீண்டுகொண்டிருக்கும் இப்பிரச்னைக்குத் தீர்வுகாணாமல் தோல்வியடைந்த அரசியல்வாதிகளிடம் கேள்வி கேட்க வேண்டும்.
மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காத பயனற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கேள்வி கேட்க வேண்டும். அதைவிட்டுவிட்டு மக்களுக்கும், சினிமா கலைஞர்களுக்கும் இப்படி நெருக்கடிகளைக் கொடுத்து தொந்தரவு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.
ஒரு கன்னடனாகவும், கன்னடர்கள் சார்பாகவும் இதற்கு நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன், சாரி சித்தார்த் என்று" பிரகாஷ் ராஜ் பதிவிட்டுள்ளார்.