காவிரி: 16,000 கனஅடி தண்ணீர் தரவேண்டும் என கோரிக்கை வைக்கப்படும் - அமைச்சர் துரைமுருகன்!
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் 16,000 கனஅடி தண்ணீர் தரவேண்டும் என கோரிக்கை வைக்கப் போகிறோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரம்
காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிய நீரை தர கர்நாடக அரசு மறுப்பதால், டெல்டா மாவட்டங்களில் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சுமார் இரண்டு மாதங்களாக பாசனத்திற்கு தேவையான நீர் கிடைக்காததால் நெற்பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசு பல முன்னெடுப்புகளை நீரை பெற்றுத் தருவதில் எடுத்து வருகின்றது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது "தமிழகத்துக்கு காவிரியில் அக்.30ம் தேதி வரை விநாடிக்கு 3000 கன அடி நீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது. நாளை காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற உள்ளது.
போராடிக் கொண்டிருக்கிறோம்
அந்தக் கூட்டத்தில், 16,000 கனஅடி தண்ணீர் தரவேண்டும் என்று தமிழகத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப் போகிறோம். நேற்று வரையில், தமிழகத்துக்கு 4.21 டிஎம்சி தண்ணீர் கிடைத்துள்ளது. இன்னும் தமிழகத்துக்கு 0.4543 டிஎம்சி தண்ணீர் வரவேண்டியுள்ளது.
எனவே, நாளைய கூட்டத்தில் 16,000 கனஅடி தண்ணீர் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்க இருக்கிறோம். தொடர்ந்து போராடிக் கொண்டுதான் இருக்கிறோம். காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்த தண்ணீரை கா்நாடகா விட்டுக்கொண்டிருக்கிறது" என்று பேசியுள்ளார்.