இரண்டாம் உலகப்போரை விட கொரோனாவால் அதிக உயிரிழப்புகள்!

covid people war dead casualty
By Jon Mar 27, 2021 11:50 AM GMT
Report

கொரோனா பெருந்தொற்றால், இரண்டாம் உலகப்போரில் ஏற்பட்ட உயிரிழப்பை விட மிக அதிகமான இழப்பை இத்தாலி எதிர்கொண்டு வருகிறது. கொரோனா பெருந்தொற்றால் பல ஆசிய, ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பிரான்சில் மீண்டும் பல மாகாணங்களில் பொதுமுடக்கம் அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

ஜேர்மனியின் தேசிய ஊரடங்கு அமுலுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டு, கடும் எதிர்ப்பால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நம்பிக்கை அளிக்கும் வகையில் பிரித்தானியாவில் மட்டும், இறப்பு விகிதமும், பாதிப்பு விகிதமும் நாளுக்கு நாள் பெருமளவு குறைந்து வருகிறது. ஆனால் ஐரோப்பிய நாடான இத்தாலி கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து இன்னும் மீளவில்லை என்றே தெரிய வந்துள்ளது.

2020ல் மட்டும் இத்தாலியில் 746,146 பேர்கள் மரணமடைந்துள்ளனர். இது ஆண்டு சராசரியை விட 112,000 அதிகமாகவும், முந்தைய ஆண்டை விட 17 சதவீதம் அதிகமாகவும் உள்ளது. மட்டுமின்றி, ஒரு வருடத்திற்குள் பிறப்புகளை விட 342,000 அதிகமான இறப்புகள் இத்தாலியில் நிகழ்ந்துள்ளன. மேலும், 2020ல் இத்தாலியின் மக்கள் தொகை 59,257,566 என இருந்தது.

இதுவே முந்தைய ஆண்டைவிட 0.6 சதவீதம் குறைவு. கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் 74,000 ஆக இருந்தது, ஆனால் இப்போது 100,000 க்கும் அதிகமாகிவிட்டது. மேலும், சுமார் 3.5 மில்லியன் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.