சாதி பெயரை வைத்து திட்டிய போலீசாருக்கு ரூ.2 லட்சம் அபராதம்
மேல்மாந்தை தலித் இளைஞரை சாதியின் பெயரால் திட்டி தாக்கியது தொடர்பாக சூரங்குடி சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ. 2 லட்சம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்திரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் மேல் மாந்தை கிராமத்தை சேர்ந்தவர் சோலையப்பன் மகன் கதிரவன். கடந்த 2018ம் ஆண்டு மேல் மாந்தை கிராமத்தில் நடந்த பெத்தனாட்சி அம்மன் கோவில் திருவிழாவின் போது சூரங்குடி காவல் நிலைய சப் - இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்முருகன் காவல் நிலையத்திற்கு வரவழைத்து தாக்கியுள்ளார்.
இது குறித்து கேட்க சென்ற அவரது தந்தையை சாதியை சொல்லி திட்டி அனுப்பி விட்டு கதிரவனை அரை நிர்வாணமாக அமர வைத்து கடுமையாக சப் - இன்ஸ்பெக்டர் தாக்கியுள்ளார். அதில் பலத்த காயமுற்று தூத்துக்குடி அரசு மருத்துவமனையை சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இது குறித்து கதிவரனின் தந்தை சோலையப்பன் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வழிகாட்டுதலின்படி மாநில மனித உரிமை ஆணையத்தில் சப் - இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இவரது மனுவை விசாரித்த மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி துரை ஜெயசந்திரன் சாட்சியம் மற்றும் ஆவணங்களை வைத்து பார்க்கும் போது சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்முருகன் மனுதாரரின் மகனை சாதியை சொல்லி திட்டி தாக்கி காயப்படுத்தி இருப்பது தெரிகிறது.
இதற்காக சப் - இன்ஸ்பெக்டருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை தமிழக அரசு ஒரு மாதத்திற்குள் மனுதாரரின் மகன் கதிரவனுக்கு வழங்கி விட்டு சப்-இன்ஸ்பெக்டரின் சம்பளத்தில் பிடித்தம் செய்து கொள்ளவும், சப்-இன்ஸ்பெக்டர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி உத்திரவிட்டுள்ளார்.
இந்த வழக்கில் மனுதாரரின் சார்பில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைத்தலைவர் வழக்கறிஞர் கிருஷ்ணன் ஆஜரானார். இந்த வழக்கில் உதவி புரிந்த சென்னை வழக்கறிஞர் காரல் மார்க்ஸ் விளாத்திகுளம் வழக்கறிஞர் தவசி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி முன்னாள் மாவட்ட தலைவர் பொன்ராஜ் ஆகியோருக்கும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி நன்றி தெரிவித்துள்ளது.