‘சிங்காரச் சென்னை 2.0’ - தெரு பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை அகற்றும் பணி தொடங்கியது!

Chennai
By Swetha Subash May 29, 2022 01:15 PM GMT
Report

சென்னையில் சாதி பெயர் கொண்ட தெருக்கள் பெயர்களை மாற்றும் நடவடிக்கையை மாநகராட்சி தற்போது தொடங்கியுள்ளது.

திராவிடர் விடுதலை கழகம் சார்பாக உள்ளாட்சி துறை அலுவலகத்தில் புகார் ஒன்று கொடுக்கப்பட்டது. அந்த புகாரில் தெருக்களுக்கு சாதிப் பெயர்களை வைத்திருப்பதாகவும் அவற்றை அகற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

‘சிங்காரச் சென்னை 2.0’ - தெரு பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை அகற்றும் பணி தொடங்கியது! | Caste Names In Chennai Street Boards Removing

அந்த புகாரின் அடிப்படையில் தற்போது தெருக்களுக்கு வைக்கப்பட்டுள்ள சாதி பெயர்கள் நீக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, மயிலாப்பூரில் உள்ள அப்பாவு கிராம தெரு 3-வது தெரு என்று 171-வது வார்டில் உள்ளது. இந்த தெருவின் பெயரில் உள்ள சாதி பெயரை மாநகராட்சி தற்போது நீக்கிவிட்டு அப்பாவு (கி) 3-வது தெரு என்று மாற்றி அமைத்துள்ளது. அதற்கான புதிய பெயர் பலகையும் அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகரட்சி அதிகாரிகள் கூறுகையில், “சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தெருக்களில் சாதி பெயர்கள் இருந்தால் அதனை மாற்றி அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. சாதி பெயர் மட்டுமின்றி தெரு பெயர் பலகையில் ‘லேன்’ என்று குறிப்பிட்டு இருந்தால் ‘சந்து’ என்று தமிழில் மாற்றம் செய்யப்படுகிறது.

‘சிங்காரச் சென்னை 2.0’ - தெரு பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை அகற்றும் பணி தொடங்கியது! | Caste Names In Chennai Street Boards Removing

அரசாணையின்படி உள்ளாட்சி துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. தெருக்களுக்கோ, பொது இடங்களுக்கோ, கட்டிடங்களுக்கோ சாதிப் பெயர் இருந்தால் மாற்றலாம் என்று அரசாணை உள்ளது.

அதன் அடிப்படையில் தெரு பெயர்களை சரி செய்ய மாநகராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். விரைவில் மன்ற கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படும். சாதி பெயர் நீக்க நடவடிக்கையை அந்தந்த வார்டில் உள்ள என்ஜினீயர்கள் மேற்கொள்வார்கள்.” என தெரிவித்தனர்.