தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு...கோரிக்கைகளும் எதிர்ப்புகளும்..?
பீகார் மாநிலத்தில் எடுக்கப்பட்டுள்ள சாதிவாரி கணக்கெடுப்பை தமிழகத்தில் எடுக்க வேண்டும் என கோரிக்கைகளும், எடுக்கக்கூடாது என்று எதிர்ப்புகளும் எழுந்து வருகின்றது.
பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு
2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, பீகாரில் உள்ள நிதிஷ் குமார் அரசு, ஜாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிட்டது. நாட்டிலேயே முதன்முறையாக சாதிவாரியான கணக்கெடுப்பு விவரங்களை பீகார் மாநில அரசு வெளியிட்டது.\
அந்த மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில் பீகார் மாநிலத்தின் மொத்த மக்கள்தொகை 13 கோடியே 7 லட்சத்து 25 ஆயிரத்து 310 என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல்/ பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்கும், அவர்களின் வழியாக நாட்டின் வளர்ச்சிக்கும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு கண்டிப்பாகத் தேவை என்று பீகார் மாநில அரசு தெரிவித்துள்ளது.
நாடு விடுதலைக்குப் பின்னர் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. மக்கள்தொகை கணக்கெடுப்பு விவகாரம் மத்திய அரசின் பட்டியலில் இருப்பதால், அதனை மத்திய அரசுதான் செய்ய முடியும். மாநில அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாத சூழல் இருந்தது. எனினும், ’மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள்தொகையை தவிர, மற்ற சாதிகளின் மக்கள்தொகையை கணக்கெடுக்க முடியாது’ என மத்திய அரசு கடந்த ஆண்டு தெளிவுப்படுத்திவிட்டது.
கோரிக்கைகளும் எதிர்ப்புகளும்..?
பீகாரில் இந்த கணக்கெடுப்பு முதல் முறை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இந்த கணக்கெடுப்பை தமிழகத்திலும் செய்ய வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி போன்றோர் பீகார் அரசின் இந்த முடிவை வரவேற்றது மட்டுமின்றி, தமிழகத்திலும் இதனை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்து சாதிவாரி கணக்கெடுப்பு நாட்டை பிளவுபடுத்தும் என தெரிவித்துள்ளார்.