பாமக நிர்வாகி அடித்துக்கொலை? - திமுக எம்.பி. மீது புகார்
கடலூர் திமுக நாடாளுமன்ற உறுப்பினரின் முந்திரி தொழிற்சாலையில் பணிபுரிந்த பாமக நிர்வாகி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாமக நிர்வாகியான கோவிந்தராஜ் என்பவர் கடலூர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டிஆர்வி ரமேஷ் பங்குதாரராக உள்ள முந்திரி தொழிற்சாலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
இதனிடையே நேற்று முன்தினம் அவர் நிறுவனத்தில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறி அங்கிருந்தவர்கள் கோவிந்தராஜை பிடித்துத் தாக்கி, இரவு காடாம்புலியூர் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.அவரது உடலில் காயத்தைக் கண்ட போலீசார் தற்போது அவரைக் காவல் நிலையத்தில் வைத்திருக்க முடியாது. எனவே காலையில் அழைத்து வாருங்கள் எனக் கூறியுள்ளதோடு உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி தெரிவித்துள்ளார்கள்.
ஆனால் கோவிந்தசாமியை அழைத்துக் கொண்டு மீண்டும் நிறுவனத்திற்கு வந்த நிலையில் அங்கு அவர் மர்மமான முறையில் உயிரிழந்திருக்கிறார். இதுதொடர்பாக கோவிந்தராஜன் மகனுக்கு கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷின் தொலைபேசியில் இருந்து தகவல் சென்றுள்ளது. பண்ருட்டி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்ட கோவிந்தராஜின் உடலை சென்று உறவினர்கள் பார்த்தபோது பல இடங்களில் காயம் இருந்துள்ளது.
இதையடுத்து கோவிந்தராஜன் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும், கொலைக்கு காரணமான கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டிஆர்வி ரமேஷ் உள்பட முக்கிய குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் என்று காடாம்புலியூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் மற்றும் பாமக நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து புகார் கொடுக்கப்பட்டவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து உள்ளதாகவும், நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து கடலூர் ஏடிஎஸ்பி அசோக்குமார் மற்றும் பண்ருட்டி டிஎஸ்பி சபியுல்லா உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டுள்ளனர்.
மேலும் கோவிந்தராஜூவின் மகன் செந்தில்வேலன் அளித்த புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஏடிஎஸ்பி அசோக்குமார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.