விஜய்சேதுபதியை எட்டி உதைப்பவருக்கு பரிசு வழங்கப்படும் - அர்ஜூன் சம்பத் அறிவிப்பால் சர்ச்சை
நடிகர்i விஜய் சேதுபதி மன்னிப்பு கேட்கும் வரை அவரை உதைப்பவருக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நடிகர் விஜய் சேதுபதி பெங்களூரு சென்றிருந்த போது பெங்களூரு கெம்பெகவுடா விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியுடன் சென்ற அவரின் உதவியாளர், அங்கிருந்த ஒருவரால் எட்டி மிதிக்கப்பட்ட வீடியோ, சமூக வலைத்தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யாதது சந்தேகங்களை ஏற்படுத்திய நிலையில், அந்த நபருக்கும், நடிகர் விஜய் சேதுபதி தரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதால் காவல்துறை வழக்குப்பதிவு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் விளக்கம் தரப்பட்டது.
இந்நிலையில், விமான நிலையத்தில் விஜய் சேதுபதியின் உதவியாளரை எட்டி உதைத்த நபர், தான் ஒரு தமிழர் எனவும், அன்றைய தினம் விஜய் சேதுபதியுடன் பேசியபோது அவர் இந்தியாவுக்கு எதிராக தாய்நாட்டை விமர்சித்தும், பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவமதிக்கும் விதமாக பேசியதாலும் நான் கண்டித்த போது விஜய் சேதுபதி தரப்பினர் தன்னை தாக்கியதாகவும், என்னை தாக்கியதால் தான் நான் அவர்களை பதிலுக்கு எட்டி உதைத்ததாகவும் வைரல் வீடியோவுக்கு விளக்கம் அளித்து யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்திருந்தார்.
இந்நிலையில் முத்துராமலிங்க தேவரை விமர்சித்த விஜய் சேதுபதியை உதைப்பவர்களுக்கு 1001 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அக்கட்சி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இதுவரை எந்த விளக்கமும் அளிக்காததால் விஜய் சேதுபதிக்கு இந்த எச்சரிக்கை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.