விரைவு தரிசனத்துக்கு அமைச்சரிடமே ரூ.4000 கேட்ட அர்ச்சகர் - திருச்சந்தூரில் பரபரப்பு
திருச்செந்தூர் முருகன் கோவிலில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ரகசியமாக திடீர் ஆய்வு மேற்கொண்ட நிலையில், அமைச்சர் என்று தெரியாமல் விரைவாக தரிசனம் செய்ய ரூ.4000 அர்ச்சகர் பணம் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலிலில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் சாதாரண உடையில் முக கவசம் அணிந்து ரகசியமாக திடீர் ஆய்வு செய்தார்.

கோவில் வளாகம், அன்னதானம் கூடம், முடி காணிக்கை செலுத்தும் இடம், தரிசன வரிசை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஆய்வு செய்தார்.
பின்னர் பக்தருடன் சேர்ந்து அன்னதானம் சாப்பிட்டு அன்னதான உணவின் தரம் குறித்தும் பக்தர்களிடம் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து தரிசன ஏற்பாடுகள் குறித்தும், நடைமுறைகள் குறித்தும் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அன்னதான அலுவலகத்தில் பணியை சரிவர செய்யாத கோவில் பணியாளர்களிடம் மன்னிப்பு கடிதம் எழுத சொல்லி அமைச்சர் அதிரடி உத்தரவிட்டார்.
மேலும் தரிசன வரிசையில் முக கவசம் அணிந்து ரகசிய ஆய்வு செய்தபோது அமைச்சர் என்று தெரியாமல் அர்ச்சகர் ஒருவர் விரைவாக தரிசனம் செய்ய ரூபாய் 4000 கேட்டுள்ளார்.
அதற்கு அமைச்சர் கையில் பணம் இல்லை என்று சொல்லியதால் ஜிபேயில் அனுப்புங்கள் என்று அந்த அர்ச்சகர் கேட்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? மாற்றம் ஏற்படுமா என தற்போது பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.