சாலையில் படுத்து போராட்டம் நடத்திய கிருஷ்ணசாமி - 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
டாக்டர் கிருஷ்ணசாமி உட்பட 686 பேர் மீது எழும்பூர் காவல்துறை 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யபட்டுள்ளது.
பேரணி
அருந்ததியர் உள்இட ஒதுக்கீட்டு அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி ஆளுநர் மாளிகை நோக்கி 07.11.2024 பேரணி நடத்த உள்ளதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்திருந்தார்.
அதன்படி,7 ஆம் தேதி டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் புதிய தமிழகம் கட்சியினர் எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே திரண்டனர்.
அப்போது போராட்ட இடத்திற்கு வந்த காவல்துறையினர் பேரணிக்கு அனுமதி இல்லை என்று கூறினர்.மேலும் அனுமதித்த நேரத்தில் போராட்டம் நடத்தவில்லை என்று கூறி , கிருஷ்ணசாமி உள்பட அவரது கட்சியினரைக் கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர்.
வழக்குப் பதிவு
ஆனால் அக்கட்சியினர் கலைந்து செல்ல மறுத்ததால், காவல்துறையினருக்கும் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திடீரென டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் அவரது கட்சியினரும் சாலையின் நடுவே படுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் தடையை மீறி பேரணி மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட கிருஷ்ணசாமி உட்பட 686 பேர் மீது அரசு ஊழியர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்தல், சட்ட விரோதமாகக் கூடுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் எழும்பூர் காவல்துறையினர் வழக்குப் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.