எருமை மாடுகள் மீது மோதி சேதம் அடைந்த வந்தே பாரத் ரயில் - மாட்டு உரிமையாளர் மீது வழக்குப்பதிவு
குஜராத்தில் சமீபத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயில் எருமை மாடுகள் மீது மோதி எஞ்சின் விபத்துக்குள்ளானது.இது தொடர்பாக எருமை மாட்டின் உரிமையாளர்கள் நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாட்டின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு
இந்திய ரயில்வேயை நவீனப்படுத்தும் வகையில் வந்தே பாரத் ரயில்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
75 நகரங்களை இணைக்கும் வகையில் இந்த ரயில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் முதல் முதலாக டெல்லி - வாரணாசி இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து டெல்லி - ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா இடையே இரண்டாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது.
அதன்பிறகு காந்திநகர் - மும்பை இடையே மூன்றாவது வந்தே பாரத் ரயிலை கடந்த மாதம் 30-ம் தேதி பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்.
இந்த ரயில் சேவை தொடங்கி ஒருவாரமான நிலையில் நேற்று விபத்தில் சிக்கியது. மும்பை நகரில் இருந்து குஜராத்தின் காந்திநகர் வரை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயில் வத்வா ரயில் நிலையத்தில் இருந்து மணிநகர் ரயில் நிலையம் இடையே நேற்று சென்று கொண்டிருந்தபோது, எருமை மாடுகள் கூட்டமாக வந்துள்ளன. அவற்றின் மீது ரயில் மோதியதில் எஞ்சின் முன்பகுதி சேதடைந்தது.
இதில் நான்கு எருமை மாடுகள் ரயில் மோதி உயிரிழந்தன. இந்நிலையில் ரயில் சேதம் அடைந்த சம்பவத்தில் எருமை மாடுகளின் உரிமையாளர்கள் நான்கு பேர் மீது ரயில்வே போலீஸார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.