ட்விட்டரில் சர்ச்சை பதிவு; அர்ஜுன் சம்பத் மீது வழக்குப்பதிவு
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சர்ச்சை பதிவு
அம்பேத்கரின் 66வது நினைவு தினம் நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இந்தநிலையில், கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்றில் அம்பேத்கருக்கு காவி உடை அணிவித்து இருந்தது சர்ச்சையான நிலையில், போஸ்டரை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்.
இந்த சர்ச்சை ஓய்வதற்குள், அர்ஜுன் சம்பத்தின் ட்விட்டர் பதிவு தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அர்ஜுன் சம்பத், பாபர் மசூதி இடிப்பு தினமான நேற்று ட்விட்டரில் சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
போலீசார் வழக்குப்பதிவு
அந்த பதிவானது, அயோத்தியில் பாபர் மசூதி இடித்ததைக் கொண்டாடும் வகையிலும் இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்படுத்தும் உள்நோக்கம் உள்ளதாகவும் அந்தப் பதிவு இருந்தது.
மேலும் இந்த ட்விட்டர் பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் தடா ஜெ ரஹீம் என்பவரும் ட்விட்டரில் சர்ச்சைக்குரிய வகையில் ஒரு பதிவை பதிவிட்டு உள்ளார்.
சர்ச்சைக்குரிய வகையில் பதிவுகளை பதிவிட்ட அர்ஜுன் சம்பத் மற்றும் தடா ஜெ ரஹீம் ஆகிய இருவர் மீதும், இரு பிரிவின் கீழ் கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்து தனித்தனியாக விசாரித்து வருகின்றனர்.