பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியவர்கள் மீது தேசதுரோக வழக்குப்பதிவு - உபி காவல்துறை அதிரடி

Arrest Uttar Pradesh case of treason
By Thahir Oct 29, 2021 09:13 AM GMT
Report

உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் மிலாது நபி பண்டிகையின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட 3 பேர் மீது அம்மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

துபாயில் நடக்கும் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் கடந்த 24ம் தேதி நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணியின் வெற்றியை வெடி வைத்து கொண்டாடியும் சமூக வலைத்தளங்களில் புகழ்ந்தும் பலர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.

இதையடுத்து இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பாயும் என உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

இந்த நிலையில், இந்தியா, பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை போட்டியின்போது பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடிய காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள் 3 பேர் மீதும் தேசதுரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த 3 மாணவர்களும் ஆக்ராவில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே நொய்டாவில் உள்ள முகமது ஜாபர், சமீர் அலி, அலி ராஜா ஆகியோர் மீது செக்டார் 20 போலீஸ் நிலைய போலீசார் தேசதுரோக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த 3 பேரும் சமூக வலைதளத்தில் கடந்த 20-ம் தேதி நடந்த மிலாது நபி ஊர்வலத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிடும் வீடியோக்களைப் பதிவிட்டதையடுத்து, மூவரும் கைது செய்யப்பட்டார்கள் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டுள்ள 3 பேரும் முதலில் ஐபிசி 153ஏ பிரிவிலும் பின்னர் 124 ஏ பிரிவிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் தேசதுரோக வழக்குத் தொடரப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.