முதல்வர் குறித்து அவதூறு கருத்து....சிவி சண்முகம் மீது வழக்குப்பதிவு
கடந்த மார்ச் மாதம் அதிமுகபொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசினார் என அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம்
அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கடந்த அதிமுக ஆட்சியில் சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சராக பணியாற்றினார். கடந்த 2021-ஆம் ஆண்டு தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்ற அவர், கடந்த ஆண்டு ஜூன் மாதம் ராஜ்யசபா உறுப்பினரானார்.
விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து அதிமுகவின் முக்கிய புள்ளியாக விளங்கும் சிவி சண்முகம், ஆளும் திமுக அரசை கண்டித்து பல கருத்துக்களை அவ்வப்போது தெரிவித்து வருகின்றார்.
வழக்குப்பதிவு
இவர், கடந்த மார்ச் மாதம் 7-ஆம் தேதி அதிமுக சார்பில் செஞ்சியை அடுத்த நாட்டார்மங்கலத்தில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் பேசிய போது, தமிழக அரசு மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மதிப்பையும், மாண்பையும் விமர்சித்து குறைக்கும் வகையில் அவதூறாகவும், தரக் குறைவாகவும்பேசியதாக கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சிவி சண்முகம் மீது அவதூறு வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக் கோரி அரசு தரப்பு வழக்கறிஞர் டி.எஸ்.சுப்பிரமணியம் நேற்று முன்தினம் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதி பூர்ணிமா, வழக்கு விசாரணை அக்டோபர் 9-ம் தேதி நடைபெறும் என்றும், அன்று சி.வி.சண்முகம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.