திடீரென தர்ணாவில் ஈடுபட்ட பாஜகவினர்....அண்ணமாலை உட்பட 800 பேர் மீது வழக்குப்பதிவு..!!
அமைச்சர் சேகர் பாபு பதவி விலக வேண்டும் என நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட 800 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேகர் பாபு பதவி விலக வேண்டும்
கடந்த 3-ஆம் தேதி தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் சங்க சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசிய கருத்துக்கள் தமிழக அரசியலை தாண்டி, தேசிய அரசியலிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மாநாட்டில் தமிழக அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபுவும் கலந்து கொண்டார். இதற்க்கு கடும் கண்டனங்களை தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இந்து அறநிலைய துறை அமைச்சராக இருக்கும் போதிலும், சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர் பாபு தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்யவேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
800 பேர் மீது வழக்குப்பதிவு
அவர் செப்டம்பர் 10-ஆம் தேதிக்குள் சேகர் பாபு பதவி விலகவில்லை என்றால், தமிழகம் எங்கிலும் பாஜகவினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நேற்று சென்னை வள்ளுவர் கோட்டம் அறநிலைய துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, தமிழக பாஜகவினர் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நேற்று மாலை, நுங்கம்பாக்கம் சாலையில் கடும் போக்குவரத்து இடைஞ்சல் ஏற்பட்டது.
மேலும், அவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டனர். இதன் அடிப்படையில், நுங்கம்பாக்கம் போலீசார் அண்ணாமலை உள்ளிட்ட 800 நபர்கள் மீது சட்டவிரோதமாக கூடுதல், முறையற்று தடுத்தல், பொதுத் தொல்லை தருதல் உள்ளிட்ட நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.