இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் சோதனை செய்க - நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் ரீதியாக பரிசோதனை செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் மனு
மதுரையை சேர்ந்த ராஜு முருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், லியோ படத்தில் உள்ள பெரும்பாலான காட்சிகள் வன்முறையை ஆதரிப்பதோடு, ஆயுத கலாச்சாரமும், மதம் தொடர்பான சின்னங்களை பயன்படுத்தி முரண்பாடான கருத்துகளையும், போதைப் பொருள் பயன்பாடு, பெண்கள் குழந்தைகளை கொல்ல வேண்டும் என்ற கருத்தை விதித்தல் உள்ளிட்ட காட்சிகளை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் காட்சிப்படுத்தியுள்ளார்.
அதுமட்டுமின்றி, கலவரம், சட்டவிரோத செயல்கள், போதைப்பொருள் வியாபாரம், துப்பாகிகளை பயன்படுத்துதல், காவல் துறை உதவியுடன் எல்லா குற்றங்களையும் செய்ய முடியும் என்ற சமூகவிரோத கருத்துக்களையும் லியோ படத்தில் காட்சிப்படுத்தியுள்ளார்.
ஒத்திவைப்பு
இதுபோன்ற படங்களை தணிக்கை துறையினர் முறையாக ஆய்வு செய்ய வேண்டும். லியோ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜை முறையாக உளவியல் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
மேலும், இந்திய குற்றவியல் தண்டனை சட்டப்படி அவர்மீது வழக்குப்பதிவு செய்து லியோ படத்தை முழுமையாக தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரியுள்ளார். இந்த மனுவானது இன்று நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது லோகேஷ் கனகராஜ் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை என்பதால் வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.