முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு...
நடிகை சாந்தினி கொடுத்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது ஆறு பிரிவுகளில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாகவும், ஐந்து ஆண்டுகளாக தன்னுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு ஏமாற்றி விட்டதாகவும், ஒன்றாக இருந்தபோது எடுக்கப்பட்ட படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டியதாகவும் நடிகை சாந்தினி தெரிவித்தார்.
மேலும் அவரால் 3 முறை கருக்கலைப்பு செய்துள்ளதாகவும் கூறிய நடிகை சாந்தினி கடந்த மே 28 ஆம் தேதி சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.
இந்த வழக்கானது துணை ஆணையர் ஜெயலட்சுமி தலைமையிலான பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இன்று அடையாறு அனைத்து மகளிர் காவல் துறையினர் நடிகை சாந்தினி அளித்த புகார் மற்றும் சமர்பித்த ஆதாரங்களின் அடிப்படையில் அமைச்சர் மணிகண்டன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கப்பட்டுள்ளது.
அவர் மீது வேண்டுமென்றே காயப்படுத்துதல், பெண்ணிடம் அத்துமீறி செயல்படுதல், நம்பிக்கை மோசடி, ஒன்றுக்கு மேற்பட்ட முறை பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.