இராஜபாளையத்தில் இளைஞரை தாக்கிய திமுக துணை சேர்மன் மீது வழக்குப் பதிவு
இராஜபாளையம் பகுதியில் சாலை மின்விளக்கு, அடிப்படை வசதி செய்து தருவதாக கூறி ஓட்டு வாங்கி விட்டு தற்போது தங்கள் வீட்டு பகுதிக்கு மட்டும் செய்து மற்ற பகுதிகளை புறக்கணித்ததாக கூறி கேள்வி கேட்ட இளைஞர் ஒருவரை திமுக ஒன்றிய துணை சேர்மன் கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலப்பாட்ட கரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த துரை கற்பகராஜ் என்பவர் திமுக சார்பில் ஒன்றிய கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது ஊராட்சி ஒன்றிய துணைச் சேர்மனாக இருந்து வருகிறார்.
மேலப் பாட்டகரிசல்குளம் பகுதியில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் போது தங்கள் பகுதிக்கு சாலை, குடிநீர், தெருவிளக்கு வசதிகள் ஏற்படுத்தித் தருவேன் என வாக்குறுதி கொடுத்து வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்றபின் அப்பகுதிக்கு எந்த அடிப்படை வசதியும் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் ஊரக வளர்ச்சி துறைக்கும் மாவட்ட ஆட்சி தலைவருக்கும் அப்பகுதி மக்கள் தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரக்கோரி கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில் அப்பகுதியில் கவுன்சிலராக வெற்றி பெற்று தற்போது ஊராட்சி ஒன்றிய துணை தலைவராக இருக்கும் துரைகற்பகராஜ் தான் வசிக்கும் பகுதிக்கு மட்டும் உயர்மின் கோபுர விளக்குகள், சாலை வசதிகள் ஏற்படுத்தியுள்ளார்.
மற்ற பகுதிக்கும் இது போல சாலை, மின்விளக்கு வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என கேட்டு சென்ற பொதுமக்களை உதாசீனப்படுத்தி காசு வாங்கிக்கொண்டு ஓட்டு போட்டீர்கள், உங்கள் பகுதிக்கு நான் ஏன் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் எனக் கூறி மேலப்பாட்டகரிசல்குளம் பகுதி மக்களை திருப்பி அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் தன் மீது அடிக்கடி புகார் மனு அனுப்பும் அப்பகுதி பகத்சிங் என்ற இளைஞர் நியாய விலை கடையில் பொருட்கள் வாங்க வந்தபோது, அப்பகுதிக்கு வந்த திமுகவைச் சேர்ந்த துணைச் சேர்மன் துரை கற்பகராஜ் என்பவர் பகத்சிங்கை தகாத வார்த்தைகளால் திட்டி பொது மக்கள் முன்னிலையிலேயே பணம் வாங்கிக் கொண்டு தானே ஓட்டுப் போட்ட? இப்போது உன்னால் என்ன செய்ய முடியும் போடா? நான் இந்த ஏரியாவில் பழைய ரவுடி என இளைஞரை அவர் தாக்கியுள்ளார்.
இது குறித்து பகத்சிங் இராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்ததை தொடர்ந்து திமுக ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் திமுக ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் மீது பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.