“என்னை கைது செய்த சுதர்ஷனின் கையை வெட்டுவேன்” - பாலியல் வழக்கில் சிக்கிய மலையாள நடிகர் திலீப் மீது மற்றொரு வழக்கு பதிவு
2017-இல் பிரபல மலையாள பெண் நடிகரின் மீது பாலியல் தாக்குதலை ஏவியதாக குற்றம்சாட்டப்பட்டு வழக்கைச் சந்தித்துக்கொண்டிருக்கும் நடிகர் திலீப் மீது,
வழக்கை நடத்தும் அதிகாரிகளின் உயிருக்கு ஆபத்து விளைவிக்க திட்டமிட்டதாக புதிய வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
2017-ம் ஆண்டு தொடுக்கப்பட்ட நடிகை கடத்தல், பாலியல் துன்புறுத்தல் வழக்கை விசாரித்துக்கொண்டிருக்கும் டி.வொய்.எஸ்.பி பைஜூ பலோஸ் என்பவரால் இந்த புகார் பதிவுசெய்யப்பட்டு, தற்போது எஃப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது.
இந்த எஃப்.ஐ.ஆரில் அளிக்கப்பட்டிருக்கும் தகவல்,
“இந்த வழக்கை விசாரிக்கும் அஞ்சு பேரும் இதற்கான பலனை அனுபவிப்பாங்க” என சொன்ன திலீப் அதற்காக திட்டம் தீட்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சோஜன், சுதர்ஷன், சந்தியா, பைஜு பாலோஸ், ஏவி ஜார்ஜ் ஆகியவர்களே அந்த ஐந்து அதிகாரிகளாக அறியப்படுகிறார்கள்.
இந்த ஐந்து பேர் அடங்கிய விசாரணைக் குழு மூன்றாகப் பிரிந்து இப்போது வெவ்வேறு கோணங்களில் இவ்வழக்கை விசாரித்து வருவதாக தெரியவந்துள்ளது.
இந்த வழக்குகளை மேற்பார்வையிட்டு வழிநடத்தும் ஏடிஜிபி ஸ்ரீஜித், நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி இந்த விசாரணைகள் நேர்மையாக நடக்கும் என தெரிவித்துள்ளார்.
திலீப்பின் நெருங்கிய நண்பரான பாலசந்திரா என்பவர் வாக்குமூலங்களை அளித்ததன் அடிப்படையிலேயே காவல்துறை இவ்வழக்கை பதிந்துள்ளது.
பெண் நடிகரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வீடியோ க்ளிப்புகளை திலீப் வைத்திருப்பதாக தெரிவித்திருக்கும் பாலசந்திரா,
“பாலியல் துன்புறுத்தல் வழக்கு தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய காவல்துறை சூப்பரண்ட் ஏவி கணேஷின் வீடியோ யூ ட்யூபில் பார்த்த திலீப், தன்னை கைது செய்த சுதர்ஷனின் கையை வெட்டுவேன் என்றார்” எனவும் தெரிவித்துள்ளார்.
நடிகர் திலீப் மீதும், அவரது தம்பி மற்றும் உறவினர்கள் மீதும் பதியப்பட்டிருக்கும் இந்த வழக்கு விசாரணை இப்போது தீவிரமடைந்துள்ளது.
பாதிக்கப்பட்ட மலையாள நடிகர், “இவ்வழக்கில் எனக்கு நீதி வேண்டும் எனவும், அதிகாரிகள் மிரட்டப்படுவதும், அச்சுறுத்தலுக்கு ஆளாவதும் மிகுந்த கவலையைத் தருகிறது” எனவும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.