குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கோலம்: யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து
யூடியூபர் மாரிதாஸ் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்வதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக வீட்டின் முன்பு கோலம் போட்ட விவகாரம் தொடர்பாக வீடியோ வெளியிட்டு திமுகவை களங்கப்படுத்தியதாக தூத்துக்குடி திமுக மாணவர் பிரிவை சேர்ந்த உமரி சங்கர் என்பவர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் மாரிதாஸ் மீது வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று யூடியூபர் மாரிதாஸ் தரப்பில் இருந்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, மாரிதாஸ் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்வதாக உத்தரவிட்டார்.