பண மோசடி வழக்கு...லதா ரஜினிகாந்த் மீது தனியார் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்
கோச்சடையான் படத்தின் போது வாங்கிய கடனை திருப்பி அளிக்காத ரஜினியின் மனைவி லதா மீது தனியார் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு செய்யப்பட்டுள்ளது.
கோச்சடையான் விவகாரம்
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கோச்சடையான். தோல்விப்படமாக இந்த படம் அமைந்த நிலையில், படத்தை தயாரித்த மீடியா ஒன் எண்டர்டெயிண்மெண்ட் 'ஆட் பியூரோ' என்ற நிறுவனத்தை சேர்ந்த அபிர்சந்த் நஹாவரிடம் ரூ.6.2 கோடி கடன் பெற்றிருந்ததாக சொல்லப்படுகிறது.
மேலும், தயாரிப்பாளர் முரளி தாக்கல் செய்திருந்த ஆவணங்களுக்கு, ரஜினியின் மனைவி லதா உத்தரவாத கையெழுத்து போட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் முரளி கடனாகப் பெற்ற பணத்தை அபிர்சந்த் நஹாருக்கு கொடுக்கவில்லை எனத் தெரிகிறது.
மேல் முறையீடு
அதன் காரணமாக தங்களிடம் வாங்கிய பணத்தை திருப்பித்தரவில்லை எனக்கூறி அபிர்சந்த் நஹார் லதா ரஜினிகாந்த் மீதும், முரளி மீதும் பெங்களூரு மாநகர 6-வது கூடுதல் முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கில் லதா ரஜினிகாந்த் மீது இந்திய தண்டனை சட்டம் 196, 199, 420 மீது புகார்கள் அளிக்கப்பட்டது. ஆனால் இந்த வழக்குகளில் போதுமான ஆதாரங்கள் சமர்பிக்கப்படாத நிலையில், லதா ரஜினிகாந்த் மீதான வழக்கை தள்ளுபடி செய்தது பெங்களூரு நீதிமன்றம்.இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து கடன் அளித்த நிறுவனமான 'ஆட் பியூரோ' நிறுவனம் தற்போது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்த்துள்ளது.