ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கு - உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை!
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது.
ஆளுநர் ரவி
தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போடுவது ,துணைவேந்தர் நியமனங்களில் தலையீடு, அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாகச் சுட்டிக்காட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி எதிராகத் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு ரிட் மனுக்களைத் தாக்கல் செய்தது. இந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த வாரம் உச்சநீதிமன்ற நீதிபதி பர்திவாலா அமர்வு முன்பாக நடைபெற்றது.
விசாரணை
அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஆளுநர் - தமிழ்நாடு அரசு மோதல் விவகாரத்தால் மக்களும் மாநில அரசும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய, மாநில அரசுகள் எழுத்துப்பூர்வமாக வாதங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
இதனையடுத்து இன்று காலை 10.30 மணிக்கு இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை மீண்டும் நடைபெற உள்ளது. முன்னதாக கடந்த வாரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராகத் தெரிவித்த கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.