மருத்துவ மாணவி தற்கொலை; சிக்கிய கடிதம் - பேராசிரியர், மாணவன், மாணவி மீது வழக்கு பதிவு!
மருத்துவக் கல்லுாரி மாணவி தற்கொலை தொடர்பாக பேராசிரியர், சக மாணவர், மாணவி ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
மாணவி தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம் வி.டி.சி. நகரைச் சேர்ந்தவர் சுகிர்தா (27). இவர் சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றில் எம்.பி.பி.எஸ். படித்தார். பின்னர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் முதுநிலை 2ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 6ம் தேதி மாணவி சுகிர்தா கல்லூரி விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் உடல் தசைகளை தளர்வடையச் செய்யும் ஊசி போட்டு மாணவி தற்கொலை செய்துள்ளது தெரியவந்தது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக குலசேகரம் போலீசார் விசாரணை நடத்தியதில், மாணவி எழுதியதாக கூறப்படும் ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
3 பேர் மீது வழக்குப்பதிவு
அந்த கடிதத்தில் "பேராசிரியர் பரமசிவம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், தன்னுடன் படித்த மாணவர்களான டாக்டர்கள் ஹரீஸ், பிரீத்தி ஆகியோர் மன ரீதியில் துன்புறுத்தியதாகவும் எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த பேராசிரியர் உள்பட 3 பேரும் மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக இந்திய குற்றவியல் சட்டம் 306 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக தக்கலை துணைபோலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன், குலசேகரம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜானகி மற்றும் போலீசார் பிற மாணவ, மாணவிகளிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.