சசிகலாவை வரவேற்க நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு கார்கள் திடீரென தீ பற்றி எரிந்து விபத்து
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசகிலா கடந்த 27ம் தேதி விடுதலையானார். சென்னைக்கு திரும்பும் சசிகலாவை பெங்களூரூவிலிருந்து வரவேற்க பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. வரவேற்பின் போது தனியாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள் திடீரென தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளானது.
பெங்களூரு தேவனஹள்ளி விடுதியில் இன்று காலை 7.15 மணிக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்திய சசிகலா, பின்னர் தமிழகம் புறப்பட்டார். இதனையடுத்து, கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே சசிகலாவை வரவேற்க நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள் திடீரென தீப்பற்றி எரிந்தன.
தீப்பற்றிய கார்களை அணைக்கும் தீயணைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரவேற்பின்போது பட்டாசு வெடித்தலில் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகின்றன.
முன்னதாக சசிகலா பயணிக்கும் காரில் இருந்து அதிமுக கொடியை அகற்றக்கோரி அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனிடம் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறையினர் நோட்டீஸ் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.