கோவையில் கார் வெடித்த சம்பவம்; முக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு
கோவையில் கார் வெடித்து சிதறிய நிலையில் அதில் பயணித்த ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார். இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கார் வெடித்துச் சிதறியது
கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே, நேற்று (23ம் தேதி) அதிகாலை 4 மணி அளவில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று வெடித்து சிதறியது.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த காவல்துறையினர் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தீயை அணைத்தனர்.
அதற்குள் காரில் இருந்த ஒருவர் முற்றிலுமாக தீயில் எரிந்தார். அதனைத் தொடர்ந்து அவரது உடலை மீட்ட காவல்துறையினர் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
அடையாளம் காணப்பட்ட உடல்
முன்னதாக இந்த விபத்தில் இறந்தவர் குறித்து எந்த தகவலும் தெரியவராத நிலையில், நேற்று இரவே காவல்துறையினர் உயிரிழந்த நபர் குறித்து கண்டறிந்தனர்.
அதில், உயிரிழந்தவர் உக்கடம் பகுதியைச் சேர்ந்த ஜமேசா முபீன் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர் பழைய துணி விற்பனை தொழில் செய்து வந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.தற்பொழுது அவருடைய பின்னணி குறித்து தனிப்படை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
உக்கடம் ஜி.எம் நகர், கோட்டைபுதூர் பகுதியைச் சேர்ந்த இவரிடம் ஏற்கனவே தேசியப் பாதுகாப்பு முகமை அதிகாரிகள் விசாரணை செய்ததும் தெரியவந்துள்ளது.
வீட்டில் ரசாயன வெடிபொருட்கள்
இதனைத் தொடர்ந்து நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு, ''இந்த நபருடைய வீட்டை சோதனையிட்டதில் அதில் சில ரசாயன வெடிபொருட்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம் பவுடர், சார்கோல், சல்பர் போன்ற நாட்டு வெடிகுண்டு தயார் பண்ணக்கூடிய சில பொருட்களை கைப்பற்றி இருக்கிறோம்.
பொறியியல் படித்துள்ள இந்த நபர் மீது ஏற்கனவே எந்த வழக்குகளும் இல்லை. இருந்தாலும் இவர் தொடர்புடைய சில நபர்களை நாங்கள் விசாரித்து வருகிறோம்.
காலையில் 4:00 மணிக்கு நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பாக மிகத் துரிதமாக செயல்பட்டு 12 மணி நேரத்திற்குள்ளேயே இந்த நபர் யார்? இது எப்படி நடந்திருக்கும் என்று கண்டுபிடித்திருக்கிறோம்.
இந்த காரைப் பொறுத்தவரை இதை வாங்கிய நபருக்கும் காரை கடைசியாக வைத்திருந்த நபருக்கும் இடையில் 9 பேர் இருக்கிறார்கள்.
இந்த சிலிண்டர் எங்கிருந்து வந்தது என்பதையும் கண்டுபிடித்திருக்கிறோம். கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் மிகவும் சிறப்பாக இந்த வழக்கை கையாண்டு இருக்கிறார்கள்.
அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவர் மீது வழக்குகள் எதுவும் கிடையாது. ஆனால் என்.ஐ.ஏ விசாரணை செய்தவர்களிடம் இவருக்கு தொடர்பு இருந்துள்ளது'' என்று தெரிவித்திருந்தார்.
ஜமேசா முபீன் தொடர்பாகவும், இந்த விபத்து குறித்தும் காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்திவருகின்றனர்.
சிசிடிவி காட்சிகள் வெளியீடு
இந்நிலையில், ஜமேசா முபீன் வீடு இருக்கும் பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.
அப்போது அந்த சி.சி.டி.யி.யில் ஜமேசா முபீனுடன் சில நபர்கள் இணைந்து ஜமேசா முபீன் வீட்டில் இருந்து சில மர்மமான பொருட்களை எடுத்து செல்வது தொடர்பான காட்சிகள் கிடைத்துள்ளன.
இது சம்பவம் நடந்த ஞாயிற்றுக்கிழமைக்கு முன்தினமான சனிக்கிழமை இரவு 11.30 மணி அளவில் நடந்துள்ளது.
அதன் அடிப்படையில் ஜமேசா முபீனுடன் தொடர்பில் இருந்தவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். அவர்கள் எடுத்து சென்ற பொருள் என்ன? எதற்காக எடுத்து சென்றனர்? இந்த விபத்து இல்லாமல் வேறு ஏதேனும் திட்டத்துடன் அவர்கள் செயல்பட்டுள்ளனரா என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர். அதேபோல், கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கார் வெடித்த சி.சி.டி.வி காட்சிகளும் வெளியாகியுள்ளன.