கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு - முக்கிய இடங்களில் குண்டு வைப்பதற்கு சதித்திட்டம் - அதிர்ச்சி தகவல்
கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் முக்கிய இடங்களில் குண்டு வைப்பதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டதாக தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு
கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக ஏற்கெனவே 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது 6வதாக ஒரு நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கோவை உக்கடம் அருகே உள்ள கோட்டைமேடு வழியாக கடந்த 23ம் தேதி அதிகாலை 4.10 மணிக்கு சென்ற கார் ஒன்று சங்கமேஸ்வரர் கோயில் முன்பு வேகத்தடையை கடந்த போது திடீரென வெடித்து தீப்பிடித்தது.
இந்த காரில் இரு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இருந்ததும், அந்த தீவிபத்தில் காரை ஓட்டிவந்த உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்ததும் தெரியவந்தது. சம்பவ இடத்தில் சிதறி கிடந்த காரின் உதிரிபாகங்கள், அங்கு சிதறிக் கிடந்த ஆணிகள், கோலிகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
உயிரிழந்த முபினின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அவர் வீட்டிலிருந்து நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் ரசாயன பொருட்கள், வயர்களை போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
என்.ஐ.ஏ. அதிகாரி விசாரணை
இந்தச் சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இதனையடுத்து, இன்று கோவை, காலை கோட்டை ஈஸ்வரன் கோவிலில், காரில் சிலிண்டர் வெடித்த இடத்தில் என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் முக்கிய இடங்களில் குண்டு வைப்பதற்கு சதித்திட்டம் தீட்டி செயல்பட்டது தெரியவந்துள்ளது.
கோவில் பூசாரி சுந்தரேசனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளது. மேலும், இது தொடர்பான பல கோணங்களில் அதிகாரிகள் தகவல் சேகரித்து வருகின்றனர்.