கோபத்தால் பறிபோன உயிர் - சாலை விபத்தில் டாக்டர் மரணமடைந்த சோகம்

madurai car accident
By Petchi Avudaiappan Dec 20, 2021 09:59 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in விபத்து
Report

தனது காரை உரசி சென்ற அரசு பஸ்சை துரத்தி சென்ற போது மற்றொரு அரசு பஸ் மீது கார் மோதி டாக்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லை பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலணி பகுதியை சேர்ந்த டாக்டர் கார்த்திகேயன் என்பவர் மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ப்ரீத்தி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். கார்த்திகேயனின் மனைவி ப்ரீத்தியும் மதுரை அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.

இதனிடையே ஞாயிற்றுக்கிழமையான நேற்று முன்தினம் விடுமுறை தினம் என்பதால் கடந்த சனிக்கிழமை இரவு தனது சொந்த ஊரான நெல்லைக்கு வந்துள்ளார். சொந்த ஊரில் நேற்று தங்கி விட்டு கார்த்திகேயன் நேற்று  காலை நெல்லையில் இருந்து மதுரைக்கு தனது காரில் புறப்பட்டு சென்றுள்ளார்.

மதுரை மாவட்டம் கப்பலூர் சுற்றுச்சாலையில் உள்ள பரம்புபட்டி அருகே நெல்லையில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பஸ் கார்த்திகேயன் காரின் பக்கவாட்டில் உரசிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த டாக்டர் கார்த்திகேயன் பஸ்சை நிறுத்துவதற்காக தனது காரில் அரசு பஸ்சை விரட்டி சென்றுள்ளார். பரம்புபட்டி பெட்ரோல் பங்க் அருகே பஸ்சை முந்திச்செல்ல முயன்று தனது காரை வேகமாக ஓட்டியுள்ளார். ஆனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் தடுப்பை தாண்டி மறுபுறம் உள்ள சாலையில் மதுரையில் இருந்து சிவகாசி நோக்கி சென்றுகொண்டிருந்த அரசு பஸ் மீது நேருக்கு நேர் மீது விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் டாக்டர் கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த டாக்டர் கார்த்திகேயனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.