ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் கேப்டன் இவரா? - புதிய தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி
நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான பெங்களூரு அணியின் கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் பெங்களூரு அணி இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. கடந்த 2014 ஆம் ஆண்டு அந்த அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி அதே மோசமான வரலாறுடன் கடந்தாண்டு ஐபிஎல் தொடருடன் கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.
மேலும் கடைசி வரை பெங்களூரு அணி வீரராக இருக்க வேண்டும் என்ற விருப்பத்தையும் அவர் வெளிப்படுத்தினார். இதனிடையே நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் பெங்களூரு பல வீரர்களை தேர்வு செய்தது. இதில் கொல்கத்தா அணியில் இருந்து தினேஷ் கார்த்திக்கையும், சென்னை அணியில் இருந்து பாஃப் டூபிளிசிஸையும் அந்த அணி ஏலத்தில் எடுத்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் இன்னும் ஐபிஎல் தொடர் தொடங்க ஒருமாத காலமே இருக்கும் நிலையில் பெங்களூரு அணியின் புதிய கேப்டன் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.இதற்காக 3 வீரர்களின் பெயர்களும் அடிபடுகிறது.
முதலாவதாக விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் என அனுபவம் வாய்ந்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கின் பெயர் இந்த பட்டியலில் முதலில் உள்ளது. ஏற்கனவே ஒரு அணியை வழிநடத்திய அனுபவம் இருப்பதால் இவருக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2வதாக சென்னை அணியின் அதிரடி பேட்ஸ்மேன் பாஃப் டூபிளிசிஸ் உள்ளார். ரூபாய் 7 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் இவருக்கும் நிறைய அனுபவம் இருப்பதால் கேப்டனாக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
3வதாக கடந்த 2021 ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதற்காக பெங்களூர் அணியில் தக்க வைக்கப்பட்டிருக்கும் கிளென் மேக்ஸ்வெல் நியமிக்கப்பட்டால் அந்த அணி நிச்சயமாக சிறப்பாக செயல்படும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகின்றனர்.