2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் சிறந்த கேப்டன் இவர் தான் தெரியுமா? - ஷேவாக் கருத்து
நடப்பு ஐபிஎல் தொடரின் சிறந்த கேப்டன் யார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கிய நடப்பு ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகள் நிறைவடைந்து தற்போது பிளே ஆஃப் ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் குஜராத்,லக்னோ, ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய நிலையில் டெல்லி, பஞ்சாப், ஹைதராபாத், கொல்கத்தா, சென்னை, மும்பை அணிகள் தொடரிலிருந்து வெளியேறின.
இதில் நேற்று நடந்த முதல் பிளே ஆஃப் ஆட்டத்தில் ராஜஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அணி பைனலுக்குள் நுழைந்தது. அறிமுக சீசனிலேயே புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்து பிளே ஆஃப் சுற்றில் வெற்றி பெற்று பைனலுக்கு சென்ற அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக், இந்த சீசனில் என்னை மிகவும் கவர்ந்த ஒரு கேப்டன் யார் என்றால் அது ஹர்திக் பாண்ட்யாதான். காரணம் அவர் இவ்வளவு அழகாக கேப்டன்ஸி செய்வார் என தான் எதிர்பார்க்கவில்லை என்றும், பேட்டிங் செய்யும் விதத்திலும் சரி பாண்ட்யா கூலாகவும், அமைதியாகவும் இருக்கிறார் என சேவாக் கூறியுள்ளார்.
முக்கியமான தருணங்களில் கவனமாக முடிவு எடுப்பதில் ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக செயல்படுகிறார். அதனால்தான் அவரது கேப்டன்ஷிப்பை நான் மிகவும் விரும்புகிறேன் எனவும் சேவாக் தெரிவித்துள்ளார்.