எனக்கான துணிச்சல் கேப்டன் பிரபாகரனிடமிருந்து வந்தது: சீமான் அதிரடி
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்த தேர்தல் களத்தில் யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நக்கீரனுக்கு அளித்த பேட்டியில், ஈழத்தில் தமிழ் மக்களுக்காகப் பல்வேறு அமைப்புகள் போராடிய நிலையில், அந்த அமைப்புகளில் இணைந்து செயலாற்றாமல் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பை 22 வயதில் கட்டமைத்து விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர் எமது தேசியத் தலைவர் பிரபாகரன்.
"எங்கு நேர்மை இருக்கிறதோ அதனை மக்கள் தன்னெழுச்சியாக ஆதரிப்பார்கள்' என்பது அவரது சிந்தனை. அவரது சிந்தனையில் ஊறிப்போன எங்களுக்கு நேர்மைதான் இலக்கு. அதுதான் இந்த துணிச்சலை தந்திருக்கிறது. இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி இந்த முறை 15 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறும்.
அந்த நம்பிக்கையை மக்கள் எனக்குத் தந்திருக்கிறார்கள்.
நாங்கள் மக்களின் வேட்பாளர்கள். இந்தத் தேர்தலில் மாற்று அரசியலுக்கான முடிவை மக்கள் எடுத்துள்ளனர். அந்த வாய்ப்பை விவசாயிக்கு (நாம் தமிழர் கட்சியின் சின்னம்) தருவார்கள் என தெரிவித்துள்ளார்.