200வது ஐபிஎல் போட்டியில் 2 முக்கிய சாதனைகளை செய்ய தவறிய கேப்டன் தோனி ...என்ன தெரியுமா?
பெங்களூரு அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி கேப்டன் தோனி 2 முக்கிய சாதனைகளை செய்ய தவறினார்.
மகாராஷ்ட்ரா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணியில் கேப்டன் பாப் டூபிளெசிஸ் 38, விராட் கோலி 30, லோம்ரர் 42 ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் குவித்தது. சென்னை அணி தரப்பில் அதிகப்பட்சமாக தீக்ஷனா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து பேட் செய்த சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ருத்துராஜ் கெய்க்வாட் - கான்வே ஜோடி சிறப்பான தொடக்க தந்தனர். கான்வே 56, மொயீன் அலி 34, கெய்க்வாட் 28 ரன்களும் எடுக்க மற்ற பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க தவறியதால் 20 ஓவர்களில் சென்னை அணி 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பெங்களூரு அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இப்போட்டி சென்னை அணிக்கான கேப்டன் தோனியின் 200வது ஐபிஎல் போட்டியாகும். இதற்கு முன்னதாக பெங்களூரு வீரர் விராட் கோலி கடந்தாண்டு இந்த இச்சாதனையை படைத்தார். தற்போது வரை கோலி அந்த அணிக்காக 217 போட்டிகளில் ஆடியுள்ளார். அதேபோல நேற்றைய போட்டி தோனிக்கு டி20 கிரிக்கெட்டில் ஒரு கேப்டனாக செயல்பட்ட 302வது போட்டியாகும்.
தவறிய சாதனைகள்
- ஒரு கேப்டனாக டி20 கிரிக்கெட்டில் 6000 ரன்கள் அடித்த முதல்நபராக விராட் கோலி உள்ளார். அவர் 190 போட்டிகளில் 6451 ரன்களை அடித்திருந்தார். 2வது வீரராக தோனி உள்ள நிலையில் (5996 ரன்கள்) நேற்றைய போட்டியில் அவர் 6 ரன்கள் எடுத்து சாதனைப் படைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2 ரன்களில் அவுட்டாகி இச்சாதனையை செய்யத் தவறினார்.
- ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கெதிராக தோனி இதுவரை 836 ரன்களை குவித்துள்ளார். இதில் 46 சிக்ஸர்களும் அடங்கும். நேற்று 4 சிக்ஸர்களை மட்டும் அடித்திருந்தால், ஐபிஎல்தொடரில் ஒரு அணிக்கு எதிராக 50 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதனையும் தோனி செய்ய தவறினார் என்பது குறிப்பிடத்தக்கது.