கேப்டனாக விராட் கோலிக்கு இதுவே கடைசிப் போட்டி - கண் கலங்கும் அந்த கடைசி தருணம்
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, நமீபியாவுக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் வெற்றி பெற்ற நிலையில் தொடரை விட்டு வெளியேறி உள்ளது.
இந்த ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக கோலிக்கு இதுவே கடைசி போட்டி. இருப்பினும் அவர் இந்த போட்டியில் பேட்டிங் செய்யவில்லை.
முதலில் பேட் செய்த நமீபியா 20 ஓவர்களில் 132 ரன்களை எடுத்தது. 133 எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்திய அணிக்காக ரோகித் மற்றும் கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.
இருவரும் 86 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ரோகித் 37 பந்துகளில் 56 ரன்களை எடுத்து அவுட்டானார். அதோடு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 3000 ரன்களையும் இந்த போட்டியில் அவர் கடந்து சாதனை படைத்தார்.
15.2 ஓவர்கள் முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. கே.எல்.ராகுல் 54 ரன்களுடனும், சூர்யகுமார் யாதவ் 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.