மனசாட்சி இருக்கா...அப்பனா இந்த திட்டத்தை குறைசொல்ல மாட்டாங்க..சேகர் பாபு..!!
மகளிர் உரிமை தொகை திட்டத்தை மனசாட்சி இருக்கும் யாரும் குறை கூற மாட்டார்கள் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
மகளிர் உரிமைத் தொகை
நேற்று மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் முக ஸ்டாலின், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை துவங்கி வைத்தார். தமிழகத்தில் மொத்தமாக பெறப்பட்ட விண்ணப்பங்களில் இருந்து மொத்தம் 1 கோடியே 6 லட்ச மகளிருக்கு இந்த உரிமை தொகை திட்டம் இனி மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கப்படவுள்ளது.
இந்த திட்டத்திற்கு பல விதமான எதிர்ப்புகளும், குறைகளும் கூறி வரும் நிலையில், தற்போது இது குறித்து தமிழக இந்து அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களை சந்தித்தார். சென்னை கொளத்தூர் எவர்வின் பள்ளியில் பள்ளி மைதானத்தில் பத்தாயிரம் சதுர அடி பரப்பில் ரோஜா மலர்கள் தூவப்பட்டு, அதன் மையத்தில் ஆயிரம் மாணவிகள் கையில் பூங்கொத்துகளுடன் ஆயிரம் என்ற எண்ணை வடிவமைத்து நன்றி தெரிவித்தனர்.
மனசாட்சி இருந்த குறை சொல்ல மாட்டாங்க
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகம் மட்டுமல்ல, ஒன்றியம் மட்டும் அல்ல உலகமே உற்றுப் பார்க்கும் அளவிற்கு மகளிருக்கான கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தை துவங்கி வைத்து முதல்வர் முக ஸ்டாலின் சரித்திரத்தில் இடம்பெற்றுள்ளார் என பெருமிதம் கூறினார்.
பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுகின்ற முதலமைச்சரை இன்றைக்கு தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து தாய்மார்களும் பாராட்டி புகழ்ந்து போற்றுகின்றனர் என பாராட்டி பேசிய அவர், ஒரு பெரிய திட்டம் செயல்படுத்துகின்ற போது சிறு சிறு பிரச்சினைகள் வரத்தான் செய்யும் என்றும் ஓரிருநாளில் அது சரி செய்யப்பட்டு விடும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த திட்டத்தை பற்றி எந்தவித குறைகளும் கூற முடியாதவர்கள் ஏதாவது கிடைக்குமா என எதிர்பார்க்கிறார்கள் என விமர்சித்தவர்களை குற்றம்சாட்டிய சேகர் பாபு, முதல்வரின் திட்டமிடலுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்றும் மனசாட்சி உள்ள யாரும் இந்த திட்டத்தை குறை சொல்ல மாட்டார்கள் என கூறினார்.